தமிழர்களுக்கு குரல்கொடுத்த மரியா கெல்வின் இன்று கொல்லப்பட்டார் !
ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுத்துவந்த மரியா கெல்வின், இன்று சிரியாவில் நடந்த தாக்குதல் ஒன்றில் சற்றுநேரத்துக்கு முன்னர் கொல்லப்பட்டார் என அதிர்வு இணையம் அறிகிறது. சிரியாவில் அந் நாட்டு அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்தை உலகறியச் செய்யவும், செய்திகளைச் சேகரிக்கவும் அவர் அங்கே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 30 ஆண்டுகளாக ஊடகவியலாளராகப் பணியாற்றிய இவர், போர் நடைபெறும் அனைத்து நாடுகளுக்கும் சென்றுள்ளார். 2001ம் ஆண்டு இவர் இலங்கை சென்றிருந்தவேளை ஆயுதப்படையினர் தாக்குதலுக்கு உள்ளாகி தனது ஒரு கண்ணை இழந்தார். அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டபோது தன்னை மயக்காமல் அவசர கண் சத்திர சிகிச்சையை செய்ய அவர் துணிச்சலோடு அனுமதித்தார். இருப்பினும் அது பலனளிக்கவில்லை.
பிரித்தானியாவின் முன்னணி ஊடகமான சண்டே டைம்ஸ், டைம்ஸ் ஒன் லைன் ஆகிய நிறுவனங்களுக்கு இவர் ஊடகவியலாளராகப் பணியாற்றினார். 2009ம் ஆண்டு புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதி யுத்தத்தில், வெள்ளைக்கொடியோடு செல்லவிருந்த புலித்தேவன் மற்றும் ப.நடேசன் ஆகியோருடன் அவர் நேரடித் தொடர்பில் இருந்தார். அவர்கள் பாதுகாப்பு ஊர்ஜிதப்படுத்தப்படவேண்டும் என்பதில் அவர் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தார். கோத்தபாய ராஜபக்ஷவிடம் இருந்து, சில உத்தரவாதங்களை இவர் பெற்று, பின்னர் புலித்தேவனோடு தொடர்புகொண்டு சில தகவல்களையும் இவர் பரிமாறி இருந்தார். இருப்பினும் இராணுவத்தினர் வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடைந்தவர்களைக் கொலைசெய்தபோது, தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டு இலங்கையில் போர் குற்றம் நடந்துள்ளது என முதல் முதல் அறிவித்தவரும் இவரே ஆவார் !
ஐ.நா அதிகாரிகளுடன் இரவிரவாகப் பேசி, சரணடையும் புலிகளை, மற்றும் மக்களையும் காப்பாற்ற இவர் அரும்பாடுபட்டார். தமிழர்கள் இலங்கையில் அடக்கி ஒடுக்கப்படுவதை இவர் வெளிச்சம்போட்டுக் காட்டினார். மரியா கெல்வின் கொல்லப்பட்டது தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றம் உடனடியாகவே இரங்கலை வெளியிட்டுள்ளது. பிரித்தானியப் பிரதமர் தமது அலுவல்களை இடை நிறுத்தி தனது அனுதாபச் செய்தியை தற்போது வெளியிட்டுள்ளார்.
சக ஊடகம் என்ற வகையில், அதிர்வு இணையமானது மரியா கெல்வின் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுகிறது. சிரிய அரசின் காட்டுமிராண்டித் தனத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். மரியா கெல்வின் ஆத்மசாந்திக்கு அதிர்வு இணையமும் பிரார்த்திக்கிறது. அவர் தமிழர்களுக்கு செய்த பல உதவிகள் இன்னும் வெளிவராமல் இருட்டில் இருப்பதை ஒரு சிலரே அறிவார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும்.
No comments:
Post a Comment