tamilveli

More than a Blog Aggregator

Monday, January 18, 2010

இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது - டப்ளின் மக்கள் தீர்ப்பாயம்




தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு ஓர் இனப்படுகொலையினை செய்துள்ளது என டப்ளினில் கூடிய மக்கள் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிங்கள இராணுவப் படைகள் போர் குற்றத்தையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்துள்ளது என்றும், எனவே இலங்கை அரசு போர்க் குற்றவாளியே என்று ஐரிஸ் தலைநகர் டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஆரம்ப கட்டத் தீர்ப்பளித்துள்ளது.

இத்தாலியின் மிலன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) கடந்த 14, 15ஆம் தேதிகளில் ஐரிஸ் தலைநகர் டப்ளினில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தப் போரில் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர்க் குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றம், இனப் படுகொலை ஆகியன குறித்து விசாரணை செய்தது.

இந்த விசாரணையில், இறுதிக்கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முல்லைத் தீவில் இருந்து தப்பி வந்த சாட்சிகளும், ஏராளமான ஆவணங்களும், படப்பதிவுகளும் முன்வைக்கப்பட்டன.

இரண்டு நாள் விசாரணையில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் நேற்று (டப்ளின் நேரப்படி) பிற்பகல் 2 மணிக்கு, மக்கள் தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி பிரான்சுவா ஹூதா, தீர்ப்பாயத்தின் ஆரம்ப கண்டுபிடிப்புகளை (preliminary Findings) வெளியிட்டார்.

அதன்படி, கீழ்க்கண்ட 4 கண்டுபிடிப்புக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹூதா அறிவித்தார்:

1. இலங்கை அரசு போர்க் குற்றவாளியே.

2. இலங்கை அரசு மானுடத்திற்கு எதிரான குற்றம் இழைத்துள்ளது.

3. இலங்கைக்கு எதிரான இனப் படுகொலை குற்றச்சாற்றின் மீது மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

4. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததற்கு சர்வதேச சமூகம், குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியன பொறுப்பாகும் என்று கூறியுள்ளார்.



இந்த விசாரணையின் போது பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்திருந்த மக்களின் மீது கனரக பீரங்கிகளைக் கொண்டு தாக்கியதும், அவர்களின் மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதும் உறுதி செய்யப்பட்டது.

பிரான்சுவா ஹூதா தலைமையிலான இத்தீர்ப்பாயத்தில் ஐரிஸ் நாட்டின் டெனிஸ் ஹாலிடே, மேரி லாலர், இந்திய நீதிபதி (ஓய்வு) இராஜேந்திர சச்சார் உள்ளிட்ட 10 பேர் நீதிபதிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரிஸ் மக்கள் தீர்ப்பாயத்திற்கு ஏற்பாடு செய்து சிறிலங்க அமைதிக்கான ஐரிஸ் மன்றம் என்ற அமைப்பு, கீழ்க்கண்ட கோரிக்கைகளை விடுத்துள்ளது:

1. இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கை அரசப் படைகளும் விடுதலைப் புலிகளும் இழைத்த போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியன மீது ஐ.நா. பான்னாட்டு அளவிலான விசாரணை நடத்த வேண்டும்.

2. வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும், இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 11,000 பேர் உட்பட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

3. சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், சித்ரவதைகள், பாலியல் குற்றங்கள், அப்பாவி மக்களுக்கு உணவு, குடிநீர் அளிக்காமல் துன்புறுத்துதல் ஆகிய அனைத்து குற்றங்களையும் முழுமையாக நிறுத்துமாறு சிறிலங்க அரசைக் கோருகிறோம்.

4. அரசியல் எதிர்ப்பை வன்முறையின் மூலமாகவும், மற்ற வழிகளிலும் ஒடுக்குவதை சிறிலங்க அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

5. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வரலாற்றுக் காலந்தொட்டு இழைத்து வரும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை நிறுத்துமாறும், அவர்களுடைய பங்கேற்புடன் கூடிய அரசியல் தீர்வு காணும்படியும், அனைத்து மக்களுக்கும் பொதுவான மனித உரிமைகளை நடைமுறைபடுத்துமாறும் இலங்கை அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி ஈழநாதம்.

No comments: