[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 07:32.42 PM GMT ]
அக்டோபர் 21ம் திகதி தீபாவளி தினத்தன்றே இந்தப் படுகொலைகள் நடைபெற்றன.
அசுரனை அழித்த தினமாகவே இந்துக்கள் தீபாவளி தினத்தை கொண்டாடுவது வழக்கம். அப்பாவிகளை அழிக்கும் தினமாக அந்த தீபாவளி தினத்தை இந்தியப்படையினர் அன்று யாழ் வைத்தியசாலையில் கொன்று ஆடி மகிழ்ந்திருந்தார்கள்.
யாழ் வைத்தியசாலையில் இந்தியப் படையினர் கொலை வெறித் தாண்டவம் ஆடிமுடித்ததும் ஆஜானுபாகுவான ஒரு இந்திய இராணுவ உயரதிகாரி வைத்தியசாலையினுள் நுழைந்தார். உயிர்தப்பி எஞ்சியிருந்த வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், நோயாளர்கள் போன்றவர்களைத் திரட்டி அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இந்தியப் படையினர் எந்தப் பிழையும் அங்கு செய்யவில்லை என்ற தொனியில் அவரது உரையாடல்கள் அமைந்திருந்தன. வைத்தியசாலையில் புலிகள் மறைந்திருந்து தாக்குதல்கள் நடாத்தியதாலேயே இத்தனை அனர்த்தங்களும் நடைபெற்றதாக அவர் அங்கு தெரிவித்திருந்தார். இந்தியப் படையினர் வேறு வழியில்லாமலேயே வைத்தியசாலைக்குள் நுழையவேண்டி ஏற்பட்டதாகவும், புலிகளுடன் சண்டையிட்டு இத்தனை புலிகளைக் கொல்லவேண்டி இருந்ததாகவும் தெரிவித்தார்.
கடந்த 16 மணி நேரமாக வைத்தியசாலைக்குள் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த நேரடியாகவே கண்டுகொண்டிருந்த மக்களுக்கு அந்த அதிகாரி கூறுவது அப்பட்டமான பொய் என்பது நன்றாகவே தெரியும். அந்த அதிகாரி மீது அவர்களுக்கு கோபம் கோபமாக வந்தது. அவரது முகத்தில் காறி உமிழவேண்டும் போன்று அவர்களுக்குத் தோன்றியது. ஆனால், அந்த அதிகாரி கூறிய அப்பட்டமான பொய்யைக் கேட்டுக்கொண்டு மௌனமாக இருப்பதைத் தவிர அங்கிருந்தவர்களால் எதுவும் செய்யமுடியாது இருந்தது.
ஏனெனில் அங்கிருந்த அத்தனை பேர்களின் உயிர்களும், அந்த இந்திய அதிகாரி வழங்கும் உயிர் பிச்சையில்தான் தங்கியிருந்தது. எப்படியாவது அன்றைய தினம் அங்கிருந்து தப்பிவிட்டால் போதும் என்று அங்கிருந்த ஒவ்வொருவரும் நினைத்தார்கள்.
இத்தனைக்கும் அந்த அதிகாரி அவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் போது, 21 வைத்தியசாலை ஊழியர்கள் இந்தியப் படையினரால் கொலை செய்யப்பட்ட நிலையில் அங்கு இரத்த வெள்ளத்தில் கிடந்தர்கள். டாக்டர் ஏ.சிவபாதசுந்தரம், டாக்டர் கே.பரிமேலழகர், டாக்டர் கே. கணேஷரெட்ணம், மற்றும் மூன்று மருத்து தாதிகள் உட்பட 21 வைத்தயசாலை ஊழியர்கள் அங்கு படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். அதைவிட 47 நோயாளர்கள் கண் பிதுங்கிய நிலையிலும், மண்டை சிதறிய நிலையிலும் அங்கு பிணமாகக் கிடந்தார்கள்.
சிலர் நோயாளர் கட்டில்களில் படுத்திருந்தபடியே துப்பாக்கிச் சன்னங்கள் பட்டு உயிரை விட்டிருந்தார்கள். அப்படியிருக்க அந்த இந்திய அதிகாரியோ தனது தரப்பின் பிழையை மறைக்கும் நோக்குடன் பேசிக்கொண்டே சென்றார்.
தனது பேச்சை முடித்துக்கொண்டு திருப்தியுடன் திரும்பினார் - தனது படையினரை அழைத்துக்கொண்டு. அந்த இந்திய இராணுவ அதிகாரியின் பெயர் கேணல் ப்ரார்.
இந்தியப் படையினர் அவர் தலைமையில்தான் அன்றைய தினம் அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள். ஆயுதத்தினால் மட்டுமே பேசத்தெரிந்த மனித இயந்திரங்களான சிப்பாய்களை விரும்பியபடி வெறித்தனமாட ஏவிவிட்ட அந்த அதிகாரி, தமது படைவீரர்களின் செயலை நியாயப்படுத்திவிட்டு திருப்தியுடன் திரும்பினார்.
உலகிலேயே மிகச் சிறந்த தத்துவ ஞானிகளையும், அகிம்சா நெறிகளையும், பண்பாடுகளையும், தன்னகத்தே கொண்டுள்ளது என்று பேசிக்கொண்டு பஞ்சமா பாதகங்களின் பாசறையாய்த் திகழும் பாரதத்தின் சுயவடிவம் அந்த அதிகாரியின் உருவில் தோன்றியதாக வைத்தியசாலையில் அகப்பட்டுத் தப்பிய ஒருவர் பின்னர் தெரிவித்திருந்தார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியசாலை ஊழியர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை அவர்களுள் ஒருவர் இவ்வாறு விபரிக்கின்றார்:
’’அதுவரை நெஞ்சத்தில் அடக்கிவைத்திருந்த துயரமெல்லாம் வெடித்து அழுகையாக வெளிவந்தது. உயிர் பிழைத்து நின்ற டாக்டர்களும், தாதியரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாய்விட்டு ஓ...! என்று கதறி அழுதார்கள். நாம் எமது படிப்பு, தகுதி அனைத்தையும் மறந்து அந்தக் கனத்தில் அனைவரும் குழந்தைகளாக இருந்தோம். முதல்நாள்வரை மற்றவர்கள் உயிர்களைக் காப்பாற்றவேண்டும் என்று ஓடிஓடி ஓயாது உழைத்த எமது வைத்தியசாலையின் எமது குடும்ப ஊழியர்களை, உயிரற்ற சடலங்களாய் சிதைந்து கருகிய அரைகுறை உடல்களாய் அங்கு காணும்போது பொங்கி உடைப்பெடுத்து வந்த அழுகையை யாராலுமே கட்டுப்படுத்த முடியவில்லை.. யாரை யார் தேற்றுவது???
அப்பொழுதுதான் ஒரு கடமையின் குரல் அங்கு உறுதியுடன் ஒலித்தது.
``அழுதது போதும். இனி இங்கு யாருமே அழ வேண்டாம். அழுவதால் எதுவித பயனும் இல்லை. இனி நாங்கள் செய்யவேண்டியது என்வென்று பார்க்க வேண்டும். இன்னும் இங்கு குற்றுயிராய்க் கிடக்கின்றவர்களைக் காப்பாற்ற வேண்டும். அதை உடனடியாகச் செய்வோம்.`` அந்த வைத்தியரின் குரலுக்கு அங்கிருந்த அனைவரும் கட்டுப்பட்டார்கள்.
ஆவேசம் வந்தவர்கள் போன்று அங்கிருந்த வைத்தியசாலை ஊழியர்கள் தமது கடமையினைத் தொடர ஆரம்பித்தார்கள். குற்றுயிராய் கிடந்தவர்களது உயிரைக் காப்பாற்றும் பணியினை அவர்கள் தொடர்ந்து செய்தார்கள். பிணமாகக் கிடந்தவர்களை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு அகற்றினார்கள்.
வைத்தியசாலையினுள் இறந்தவர்கள், மற்றும் வைத்தியசாலைச் சுற்று வட்டத்தில் இறந்தவர்கள் என்று நூற்றிற்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் திரட்டப்பட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எந்த உடலையும் மரணச் சடங்கிற்காக வெளியில் கொண்டு செல்லக்கூடாது என்று இந்திய இராணுவம் கண்டிப்பாக கட்டளை பிறப்பித்திருந்தது.
இறந்தவர்களை பார்ப்பதற்கென்று வெளியில் இருந்து உறவினர்கள் உள்வருவதற்கும் இந்திய இராணுவம் அனுமதியளிக்கவில்லை.
புதிய வைத்தியப் பிரிவு கட்டுவதற்காக என்று வைக்கப்பட்டிருந்த மரங்கள் அன்று இறந்தவர்களை தகணம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.
வைத்தியசாலையில் இந்தியர்கள்:
சம்பவம் நடைபெற்ற தினம் முதல் இந்தியப் படையினரின் பூரன கட்டுப்பாட்டிலேயே யாழ் வைத்தியசாலை இயங்க ஆரம்பித்தது.
வைத்தியசாலையின் செயற்படும் விஸ்தீரணம் இந்தியப் படையினரால் சுருக்கப்பட்டது. இந்தியப் படையினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வைத்தியசாலையின் ஒரு சிறிய பிரதேசத்தில் மட்டுமே நோயாளர்கள், மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் நடமாட அனுமதிக்கப்பட்டார்கள்.
புதிதாக இந்திய இராணுவ வைத்தியர்கள் தமது சேவையை யாழ் வைத்தியசாலையில் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.
தொடர்ந்து இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க வைத்தியர்களும், தாதிகளும் யாழ் மக்களுக்கு வைத்திய சேவை புரிய வந்ததாகக் கூறிக்கொண்டு, காயமடைந்து வரும் இந்தியப் படை ஜவான்களுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.
பழிவாங்கல் நடவடிக்கை.
இந்தியப் படையினர் காலத்தில் நடைபெற்ற மற்றொரு முக்கிய அவலம் பற்றி அடுத்ததாக நாம் பார்க்க இருக்கின்றோம்.
1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் திகதி யாழ் கொக்குவில் பிரதேசத்தில் இந்தியப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் ஒரு அதிரடித் தாக்குதலை நடாத்தியிருந்தார்கள்.
இந்தியப் படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அந்த அதிரடித் தாக்குதலுக்குப் பழிதீர்க்கும் முகமாக இந்திய இராணுவத்தின் ஒரு படைப்பிரிவு யாழ் கொக்குவில் அகதி முகாமை நோக்கி நகர ஆரம்பித்தது.
அந்தப் படைப்பிரிவுக்கு தலமைதாங்கிய இந்தியப்படை அதிகாரியின் பெயர் கேணல் மிஸ்ரா.
ஈழத் தமிழர்களின் படுகொலைகளின் மற்றொரு அத்தியாயத்தை இரத்தத்தால் எழுதுவதற்காக நூற்றுக்கணக்கான இந்திய ஜவான்கள் கம்பீரமாக விரைந்துகொண்டிருந்தார்கள்.




சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இடதுசாரியாக இருந்து மனித உரிமை வாதியாக செயற்பட்ட மஹிந்த இராஜபக்ஷ என்னுடைய நண்பரா… இல்லையா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு போலியாக தன்னை ஒரு மனித உரிமை ஆர்வலராகக் காட்டிக்கொண்ட ராஜபக்சவின் கடந்தகால மனித உரிமைச் செயல்பாடுகள் போலியானவை. அது மக்களையும் அவரோடு பணியாற்றிய என்னைப் போன்ற மனித உரிமையாளர்களையும் ஏமாற்றிய செயல்!இவ்வாறு கூறியுள்ளார் நிமல்கா பெர்னாண்டோ. . இடதுசாரிகள் வலுவாக இருந்தபோது, அவர்களோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். பின்னர் 1988-ல் சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரதுங்க கொல்லப்பட்டார். அப்போது இலங்கை சுதந்திராக் கட்சியில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது அந்த வெற்றிடத்தை மிகச் சாதுரியமாகப் பயன்படுத்திக்கொண்டார் ராஜபக்ச. அதில் இருந்துதான் மாறிவிட்டார். . ஜே.வி.பி. கிளர்ச்சிக் காலக்கட்டத்தில் காணாமல்போன சிங்கள இளைஞர்களுக்காக, ராஜபக்ச குரல் கொடுத்தார். ஆனால், அவருக்குள் ஒளிந்திருந்த சிங்களத் தேசியவாதியை அப்போது எங்களால் அடையாளம் காண முடியவில்லை. அரசியல் தலைவராக உருவான பின்னர் அவர், பௌத்தத் துறவிகள், பௌத்த மதச் சடங்குகள் என்று தன்னை மாற்றிக்கொண்டார். இவ்வாறு விகடனில் கேள்வி பதில் பதிவில் கூறியுள்ளார். . கேள்வி: ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நீங்கள் என்ன பேசினீர்கள்? பதில்: இலங்கைக்குள் பேச முடியாததை ஜெனீவாவில் பேசினேன். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் மனித உரிமைகளுக்காக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் குரல் கொடுத்து வருகிறேன்.இப்போது மனித உரிமைகளைக் கொன்ற ஜனநாயகமற்ற நாடாக இலங்கை இருக்கிறது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை வைத்திருக்கும் ராஜபக்சவுக்கு எதிராக இலங்கையில் எதிர்க்கட்சி என்ற ஒன்றே இல்லை. இலங்கைக்குள் ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், எல்லோருமே அமைதியாகிவிட்டனர். அங்கு நடத்தப்பட்ட போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக எதையும் பேசமுடியாத நிலையில், ராஜபக்ச அரசு எதிர்க்கட்சிகளைக் கட்டுப்படுத்தி, ஊடகங்களைத் தாக்கி, வட பகுதித் தமிழ் மக்களை எப்படி எல்லாம் சித்திரவதை செய்கிறார்கள் என்று பேசினேன். காணாமல்போனவர்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினேன். நாட்டுக்கு உள்ளும் எவரும் பேசக் கூடாது, நாட்டுக்கு வெளியேயும் எவரும் பேசக் கூடாது என எதிர்பார்க்கிறார்கள். இது எப்படிச் சரியாகும்? கேள்வி: உங்களுடைய காலை உடைப்பேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறியிருக்கிறாரே? பதில்: கை, கால்களை உடைப்பது, ஆட்களைக் கடத்துவது, அரசு ஊழியர்களை மரத்தில் கட்டிவைப்பது இதெல்லாம் அவருடைய தொழில். காரணம் அவர் அரசியல்வாதி அல்ல, தலைமறைவு ஆயுதக் குழுக்களோடு தொடர்பு உடையவர். இதுபோன்ற சட்ட விரோத மனிதர்களைக் கொண்டுதான் ராஜபக்ச ஆட்சி செய்து வருகிறார். போருக்கு எதிராகவும், இனப்படுகொலைக்கு எதிராகவும் பேசியவர்கள் கொல்லப்பட்டார்கள், காணாமல்போனார்கள். பலர் பயந்து நாட்டைவிட்டு வெளியேறினார்கள். கடைசியில் எல்லா நியாயமான குரல்களும் ஒடுக்கப்பட்டுவிட்டன. இப்போது அங்கு இருப்பவர்கள் எல்லாம் மேர்வின் சில்வாவும், விமல் வீரவன்சவும், இவர்களை வழி நடத்தும் ராஜபக்ச போன்றவர்களும்தான். ஆனால் என்னைப் பொறுத்த வரை, மக்களின் மனித உரிமைகளுக்காக எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன். கேள்வி: போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வட பகுதித் தமிழ் மக்களின் நிலை எப்படி உள்ளது? பதில்: யுத்தம் முடிந்து ஆண்டுகள் பல கழிந்துவிட்டாலும், அது மக்களுக்குப் புதிய புதிய பிரச்னைகளை உருவாக்கிவிட்டது. போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. உறவு, நிலம், வீடு என ஒட்டுமொத்த வாழ்வையும் அவர்கள் இழந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு நிவாரணங்களும் இல்லை. அரசோ, தன்னார்வக் குழுவோ அடுத்த வேளைக்கு ஏதாவது தர மாட்டார்களா என்றுதான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். வட பகுதியில் 80 சதவிகித தமிழ்க் குடும்பங்களைப் பெண்கள்தான் தலைமை ஏற்று நடத்துகிறார்கள். காரணம், ஒவ்வோர் இல்லத்திலும் உள்ள ஆண் கொல்லப்பட்டுவிட்டார், அல்லது காணாமல் போய்விட்டார், அல்லது தடுப்பு முகாமில் உள்ளார். யாழ்ப்பாணத்தில் புதிய முகாம்களை உருவாக்கி இருக்கிறார்களே தவிர, 23 ஆண்டுகளாக வைத்திருக்கும் பழைய முகாம்களைக்கூட கலைத்துவிடவில்லை. அப்புறம் எப்படி நிலைமை மாறிவிட்டதாக சொல்லமுடியும்.” எந்தப் பயமும் இல்லாமல் பேசுகிறார் நிமல்கா!