tamilveli

More than a Blog Aggregator

Sunday, April 22, 2012

கொழுப்பு’ நல்லது?




`கொழுப்பு’ என்றாலே பயப்படுபவர்களுக்கு ஓர் இனிய செய்தி- `கொழுப்புச் செல்களில் உள்ள ஒரு மரபணு, சர்க்கரை நோயில் இருந்து காக்கிறது’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். சர்க்கரை நோய்க்கான சிகிச்சையில் இது ஒரு குறிப்பிடத்தக்க திருப்பமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரி தலைமையிலான ஒரு குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.
அதில், பொதுவான கருத்துக்கு மாறாக, உடம்புக் கொழுப்பானது நன்மையே செய்கிறது, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் உடம்பின் திறனை ஊக்குவிக்கிறது என்று கண்டறியப்பட்டது.
ஆய்வாளர்கள் கூறும் chREBP மரபணு, குளூக்கோஸ் சர்க்கரையை `பேட்டி ஆசிட்களாக’ மாற்றுவதன் மூலமும், இன்சுலினுக்கான நுண்ணுணர்வை ஊக்குவிப்பதன் மூலமும் `டைப் 2′ சர்க்கரை நோயை எதிர்க்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வயதில் உடல் பருமன் அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பொதுவாக `டைப் 2′ சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
“எல்லா கொழுப்பும் தீமையானது என்ற பொதுவான கருத்து உண்மையல்ல. உடல் பருமன் என்பது மோசமான உடலியல் செயல்பாடுகளுடன் தொடர்புடையது. அதுதான் ஒருவருக்குச் சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்களை ஏற்படுத்துகிறது. ஆனால், குண்டான பலருக்கு உடலியல் செயல்பாடுகள் ஆரோக்கியமாகவே இருக்கின்றன” என்று ஆய்வுக் குழுத் தலைவர் டாக்டர் மார்க் ஹெர்மான் கூறுகிறார்.
உடல் பருமனானவர்களைப் பொறுத்தவரை, சர்க்கரையானது கொழுப்பு செல்களில் நுழைவது தடுக்கப்படுவதால் அதன் அளவு மிகவும் அதிகரிக்கிறது. ஆனால் ஆய்வகத்தில், குண்டான எலி ஒன்றில் குளூக்கோஸை கடத்தும் ஜீன் அளவை அதிகரித்தபோது, அதன் மூலம் மேலும் அதிக சர்க்கரை கொழுப்புச் செல்களில் அனுமதிக்கப்படுவதும், அதன்மூலம் சர்க்கரை நோயிலிருந்து எலி காக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. குளூக்கோஸை கடத்தும் ஜீன்கள் இல்லாத சாதாரண எடையுள்ள எலிகளில் நாளடைவில் சர்க்கரை நோய் அறிகுறிகள் ஏற்பட்டதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
கொழுப்பு குறித்த தற்போதைய கண்டுபிடிப்பு முக்கியமானது என்று உற்சாகமடைந்துள்ள ஆய்வாளர்கள், மேலும் இதுதொடர்பான தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

No comments: