tamilveli

More than a Blog Aggregator

Sunday, February 7, 2010

வியர்வை தெரபியால் ஒரு பயனும் இல்லை - நிபுணர்கள் எச்சரிக்கை

வியர்வை மூலம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றி தேகத்தை சுத்தப்படுத்தலாம் எனக் கூறி ஏராளமான சிகிச்சை முறைகள் உலகெங்கும் பரவி வருகின்றன. ஆனால் இவற்றால் ஒரு பயனும் கிடையாது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

'ஸ்வெட் ராப்ஸ்,' 'ஸ்வெட் லாட்ஜ்' போல ஏராளமான வியர்வை தெரப்பி முறைகள் பிரபலமாகி வருகின்றன.

ஆனால் உண்மையில் வியர்வையின் மூலம் உடலை சுத்தப்படுத்த முடியாது என்றும், நச்சுப் பொருட்களை வியர்வையின் மூலம் வெளியேற்ற முடியாது என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

உடல் வியர்த்தல் என்பது உடலின் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் ஒரு இயல்பான உடலியக்கம். மனிதர்களின் ரத்தம் சூடானது என்பதால், உடலில் அதிக உஷ்ணம் ஏற்படும் போது, உடனடியாக அதை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

அதனால், உடல் அதிக உஷ்ணமடையும் சமயத்தில், வியர்வை நாளங்கள் வழியாக தண்ணீர் ஆவியாக வெளியேறி தோலையும் உடலையும் குளிர்விக்கிறது.

பொதுவாக வியர்வை திரவத்தில் அதிகளவு தண்ணீரும், சிறிய அளவில் சோடியம் குளோரைட், மீதைல் ஃபீனோல் உள்ளிட்ட வேதியல் சேர்க்கைகளும் காணப்படும்.

மற்றபடி, நச்சுப்பொருட்கள் வியர்வை வழியாக வெளியேறும் என்பதெல்லாம் தவறானவை என உடற்கூறு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நுரையீரலில் தான் போதை உள்ளிட்ட நச்சுப்பொருட்கள் ஒதுக்கப்படுமே தவிர, வியர்வை சுரப்பிகளுக்கு அந்த வேலையில்லை என்றும் கூறுகின்றனர்.

இந்த இயல்புக்கு மாறாக, நச்சுப்பொருட்களை வியர்வை மூலம் வெளியேற்ற முயற்சித்தால் அது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தாகவும் அது முடியும் என்கின்றனர். கடந்த ஆக்டோபர் மாதம் 'ஸ்வெட் லாட்ஜ்' என்று கூட்டு பயிற்சியை நடத்திய ஜேம்ஸ் ஆர்தர் ரே, இதே பிரச்னைக்காக மனிதப் படுகொலை வழக்கில் சிக்கியதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவரின் கூட்டு வியர்வை பயிற்சி முகாமில் கலந்துகொள்ள பல்லாயிரம் டாலர்களை மக்கள் செலுத்தினர். ஆனால் அதில் அதீத விளைவுகள் ஏற்பட்டு மூன்று பேர் பலியானார்கள். 18 பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்

No comments: