படித்ததில் பிடித்தது
அப்படியானால் வெறுப்பு எனும் கறுப்பு உணர்வை துடைத்து எறிய வேண்டும். அது முடியுமா? ஏன் முடியாது. குழந்தைகளாக இருக்கும்போது அந்த உணர்வு இல்லையே. வளர வளரத்தானே வெறுப்பு உணர்வும் வேர்விட்டு படர்ந்து விருட்சமாக வளர்ந்தது வெறுப்பு என்ற விரும்பத்தகாத ஒரு குணத்தை மட்டும் நீங்கள் கைவிட்டுப் பாருங்கள் உலகில் உள்ள அனைவருமே உங்களுக்கு நண்பர்களாகத் தான் இருப்பார்கள்.
குழந்தைகளாக இருக்கும்போது மனதில் துளிர்விடாத வெறுப்பு, சூழ்நிலையின் தாக்கத்தாலும், உடன் பழகுபவர்களாலும், வளர்ப்பாலும் நம் மனதில் மெல்ல குடிபுகுகிறது விளைவு? பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து, பக்கத்து நாடு வரை நமது வெறுப்பைக் காட்ட நேரிடுகிறது.
இந்த வெறுப்புணர்வால் நமக்கு கிடைப்பது ஒன்றுமில்லை. நண்பர்களின் வழிகாட்டால், உறவினர்களின் உதவி, பெற்றோர்களின் பாசம், ஆகியவற்றை இழப்பதுதான் மிச்சம். கடைசியில் நாம் தனிமரமாக நிற்க வேண்டியதுதான்.
பல வகைகளில் வெறுப்பு உருவெடுக்கும். ஒருவரின் இனம், குணம், நிறம், பேச்சு, மதம், பொருளாதாரம், பழக்கவழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த நச்சுக் குணம் நம் மனதில் குடிகொள்ளும்.நாம் பேசும் வெறுப்பான வார்த்தைகள், நம்மிலிருந்து தெறித்து, எதிர்படுபவர் மீது விழும்போது, அவர்களுடைய மனநிலையைப் புரிந்து கொள்ள தவறிவிடுகிறோம்.உங்கள் மனதிற்குள் வெறுப்புணர்வு நுழைந்துவிட்டால் அவ்வளவுதான்.அனைவருமே உங்களுக்கு எதிரியாக தோன்றுவார்கள்.பிறருடைய வளர்ச்சி உங்களை ஏளனம் செய்வது போல தெரியும்.வெறுப்புணர்ச்சியை ஒழிக்க இங்கே தரப்பட்டுள்ள 10 வழிகள் நிச்சயம் உங்களுக்கு உதவும்.
செயல்பாடு
==========
‘நீ எவ்வாறு நினைக்கிறாயோ அவ்வாறே வளர்வாய்.’’ இது ஒரு பழமொழி.உங்களுடைய நினைப்பும், செயல்பாடும் மிகவும் முக்கியம்.உங்களின் செயல்பாடும், பேச்சும் எவ்வாறு அமைய வேண்டும். பொறுமையையும், அன்பையும் வெளிக்காட்டுவதாக இருக்க வேண்டும்.உங்களுடைய செயல்பாடே, அனைத்து கெட்ட நிகழ்வுகளுக்கும், நல்ல நிகழ்வுகளுக்கும் அடிப்படை…உங்களுடன் பழகுவோரிடம் பொறுமையையும், அன்பையும் உணர்த்த வேண்டும்.இனம், நிறம், சாதி, மதம் பொருளாதாரக் காரணிகளால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு இருக்கும் மக்களிடம் நாம் அன்பு காட்ட வேண்டும்.-அவர்களுக்கு ஆதரவான, ஆறுதலான வார்த்தைகளை வழங்க வேண்டும். நம்முடன் பழகுவோரிடமும் இந்த வெறுப்புக் காரணிகளைக் வெளிக்காட்டக் கூடாது.இந்தப் பழக்கத்தை உங்கள் மனதில் தொடர்ந்து நிலைநிறுத்தினால், நாளடைவில் உங்கள் வெறுப்புணர்வு ஒழிந்து அன்பு மலரும்.
ஒருங்கிணைப்பு :
===============
தனிப்பட்ட நபர் மீதோ அல்லது குழு மீதோ உங்களுக்கு வெறுப்புணர்ச்சி இருக்கலாம். அந்தக் குழுவினரையோ அல்லது தனிப்பட்ட நபரையோ நீங்கள் ஒதுங்கி வைப்பதுபோல் வேறு பலரும் ஒதுக்கி வைக்கலாம். வெறுப்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீங்கள் இருக்க வேண்டும். வெறுப்புணர்ச்சி உள்ளவர்களை ஒன்றிணைத்து, பொறுமையின் முக்கியத்துவத்தையும், வெறுப்புணர்ச்சியின் பாதிப்புகளையும் எடுத்துரைக்க வேண்டும். வெறுப்புணர்ச்சி ஏன் மனதில் தோன்றுகிறது என்பதை ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்து அதை மனதிலிருந்து அகற்றுவதற்கான ஆலோசனைகளைக் கேட்க வேண்டும்.தொடக்கத்தில் வெறுப்புணர்ச்சி உள்ளவர்களை ஒன்றிணைப்பது சிறிது சிரமமாக இருக்கும்.நாளடைவில் குழு முறையில் அமர்ந்து அவர்களுடன் நீங்கள் கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும்.இதன் மூலம் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படுவது நிச்சயம். பல்வேறு குணங்களைக் கொண்டோருடன் கலந்துரையாடி, மனம் விட்டுப் பேசுவதன் மூலம் நட்புறவு வளர்ந்து வெறுப்பு மறைவதற்கு வாய்ப்பு உண்டு.ஆகவே, வெறுப்புணர்ச்சியுள்ள நபரை ஒருங்கிணைத்து அவர்களுடன் கலந்துரையாடுங்கள். அந்தக் குணத்தை களைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
ஆதரவு :
==============
நமது வெறுப்புணர்ச்சியால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் முக்கியம். உடல் ரீதியாக, மனரீதியாக, பாலின ரீதியாக மட்டுமின்றி, இனம், நிறம், சாதி பொருளாதார அடிப்படையில் கூட வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம். தாக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளில் இருந்து, சட்ட உதவிகள் வரை அனைத்து வகையிலும் ஆதரவு அளிப்பது அவசியம்.மற்றவர்களுக்கு உதவி செய்வதை சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். வேறு சிலரோ, யாரேனும் உதவி செய்ய முன்வர மாட்டார்களா என்று ஏங்கியிருப்பார்கள். அத்தகைய நபர்களை இனம் கண்டு ஆதரவு அளிப்பது வெறுப்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்.நாம் மட்டும் ஆதரவு அளித்தால் போதாது. நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும்படி செய்ய வேண்டும்.
வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்ட பிரிவினரை நாம் அடிக்கடி சந்தித்து பேச வேண்டும். அவர்களுடன் கடிதம் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு அவர்களுக்குள் மெல்ல மறைவதற்கு இவை உதவும்.நீங்கள் தனியாக இல்லை. நான் உங்களுடன் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை அளிக்கிறீர்கள் எனபதை மறந்து விடாதீர்கள். மதநம்பிக்கை உடையவர்களாக இருந்தால், அந்தந்த மதத்திற்குரிய சின்னங்கள், கடவுள்களின் படங்களை அளித்து நம்பிக்கை ஊட்டலாம்.வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வெறுப்புணர்வை பரப்பும் குழுக்களால் பாதிக்கப்படலாம். வார்த்தைகளாலோ அல்லது உடல்ரீதியாகவோ அவர்கள் தாக்கப்படலாம் என்று நீங்கள் நினைத்தால் அத்தகையோருக்கு பாதுகாப்பு அளிக்கலாம்
செயலில் இறங்குங்கள் :
===============================
வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் ஆதரவு மட்டுமே அளிப்பது போதாது. வெறுப்புணர்வுடன் அலைபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.வெறுப்புணர்வு எங்கு உள்ளது. எப்படி, எதனால் உருவாகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்ட மக்களையும் இச்செயலில் ஈடுபடுத்தினால், அவர்களின் அனுபவ வார்த்தைகள் நிச்சயம் வெறுப்புணர்வுடன் இருப்பவர்களுடைய மனதையும் மாற்ற உதவி புரியும்.
மாற்றுவழிகளைக் கண்டுபிடியுங்கள் :
========================================
வெறுப்புணர்வை பரப்பும் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் ஒதுக்க வேண்டும்.ஒரு குறிப்பிட்ட பிரினருக்கு எதிரான கூட்டம் என்று தெரிந்தால் அதில் கலந்து கொள்ளாதீர்கள். அவர்களுக்கு எதிரான ஊர்வலத்தை புறக்கணியுங்கள். தனிப்பட்ட ஒருவருக்கு எதிரானதாக் இருந்தாலும் அதைக்கூட தவிர்த்து விடுங்கள்.உங்கள் அருகில் வெறுப்புணர்வை வளர்க்கும் விதத்தில் யாரேனும் பேசினாலோ அல்லது நடந்து கொண்டாலோ அவரகளிடம் வெறுப்புணர்வைக் குறைக்கும் வழிகளைக் கூறுங்கள்.அன்பையும், ஒற்றுமையும், மனித உரிமையின் அவசியத்தையும் அவர்களிடம் வலியுறுத்துங்கல். மனிதாபிமானத்துடன் மற்றவர்களுடன் பழக வேண்டும். மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறுங்கள். வெறுப்புணர்ச்சியை மறக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு மாற்றுவழிகளை தேட வேண்டும்.
போராட்டம் :
==============
மனம் முழுவதும் வெறுப்புணர்வை நிரப்பியவர்களை கண்டுபிடியுங்கள். அவர்களுடைய மனதிலிருந்து வெறுப்புணர்வை ஒழிக்கப் போராட்ட வேண்டும்.அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் ஒளிந்திருக்கும் வெறுப்புணர்வை எடுத்துக் காட்ட வேண்டும்.அதற்கு, நடுநிலையுடன் செயல்படும் நபர்கள், நிறுவனங்கள், நாளேடுகள் ஆகியவற்றை துணையாகக் கொள்ளுங்கள். ஆனால், எவ்விதத்திலும் வெறுப்பை ஒழிக்க வெறுப்புணர்வு உள்ளவர்களிடம் நேரடியாக மோதாதீர்கள். அவர்களை நேரடியாக கண்டிக்காதீர்கள். இப்படி செய்தால் அவர்களுடைய வெறுப்புணர்வை நாம் ஈட்ட வேண்டியது வரும்.மறைமுகமான வழிகள் மூலமாகவே போராட வேண்டும். வெறுப்புணர்வுடன் உள்ளவர்கள் கூடும் இடங்களை தேடிப்பிடியுங்கள்.பொறுமையின் அவசியத்தையும், அன்பின் முக்கியத்துவத்தையும் அங்கு பரப்புங்கள். வீடுகள் தோறும் பிரச்சாரம் செய்யுங்கள். இணையதளங்கள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள், நாளேடுகள் வாயிலாக பரப்புங்கள்.
புகழ்பெற்றவர்கள் மூலம் பிரச்சாரம் :
==================================
வெறுப்புணர்வை ஒழிக்க முகம் தெரியாத நாம் கூறும் கருத்துகளையும், ஆலோசனையைக் காட்டிலும், தெரிந்த ஒரு முக்கிய நபர் மூலமாக வெறுப்புணர்வுக்கு எதிரானக் கருத்துகளைப் பரப்பலாம். நடிகர், நடிகைகள், கட்சித் தலைவர்கள், ஊர் பெரியோர்கள், மதத்தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மூலமாக வெறுப்புணர்வை ஒழிக்கும் வழிகளை எடுத்துக் கூறுவதன் மூலமாக கருத்துகள் 100 மடங்கு விரைவாக அனைவரையும் சென்றடையும். இத்தகைய புகழ் பெற்றவர்கள் மூலமாக கூட்டங்கள் நடத்துவது, ஊர்வலம் நடத்துவது பிரச்சாரம் செய்வது போன்றவற்றின் மூலம் வெறுப்புணர்வு உள்ளவர்களையும் இணைத்து அவர்கள் மனதில் உள்ள குணத்தை ஒழிக்கச் செய்யலாம். அதற்கான பாதிப்பும் நிச்சயம் இருக்கும்.
தொலை நோக்கு :
வெறுப்புணர்வை தற்சமயத்திற்கு மட்டும் ஒழிக்காமல், எதிர்காலத்தில் அத்தகைய குணம் மனதில் தோன்றாத நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு நம் எண்ணங்களையும், செயல்களையும், சிந்தனைகளையும் அகலப்படுத்திக் கொள்வது முக்கியம். வெறுப்புணர்வு என்பது முதலில் நம்முடைய வீட்டில் இருந்துதான் தொடங்குகிறது. நம் மனதிலிருந்துதான் தொடங்குகிறது. அதை எவ்வாறு வேரறுப்பது என்பதை சிந்திக்க வேண்டும். வெறுப்புணர்வை ஒழிக்க மிகச்சிறந்த வழி பொறுமை என்று மனோவியல் வல்லுநர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆதலால் பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். எப்போதும் ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு பிரிவினரைப் பற்றியோ முழுமையாக அறிந்து கொள்ளாமல் மனதில் அவர்கள் குறித்த தவறான எண்ணங்களை வளர்க்கும் பழக்கத்தை அழிக்க வேண்டும். இந்த எண்ணமாற்றம் மனதில் உதித்துவிட்டால் செயல்பாடுகளில் நிச்சயம் மாற்றம் வரும். தவறான, முழுவிவரம் தெரிந்து கொள்ளாமல் வரும் எண்ணங்களே வெறுப்புணர்வுக்கு அடிப்படை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பொறுமையைக் கற்றுக்கொடுங்கள் :
-------------------------------------------------------------\
விதை நன்றாக இருந்தால் விளையும் பொருளும் நன்றாக இருக்கும். ஆதலால், வெறுப்புணர்வை ஒழிக்கும் நடவடிக்கையை குழந்தைகளிடமிருந்து தொடங்குவது சிறந்தது. அவர்களுக்குப் பொறுமையின் முக்கியத்துவத்தையும், சக மாணவர்களிடம், தோழிகளிடம் காட்டும் அன்பின் அவசியத்தையும் எடுத்துக் கூற வேண்டும். இன, மத, பொருளாதார உணர்வுகளில் உண்டாகும் வெறுப்புகளால் விளையும் தீமைகளை எடுத்துக்கூற வேண்டும்.நல்ல கதைகள், நாடகங்கள், பாடங்கள், பாடல்கள், ஓவியங்கள் மூலமாகவும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி அவர்களையும் பங்கேற்கச் செய்யலாம். யோகா, இசை, உள்ளிட்டவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தி, அதன் மூலமாக பிறரிடம் வெறுப்புணர்வை காட்டாமல் இருப்பது குறித்து உணர்த்தலாம்.
உங்களைச் சோதித்துக் கொள்ளுங்கள்
=========================================
உங்கள் மனதில் பிறரைப்பற்றிய தவறான எண்ணங்கள், முழுமையாக அறியாமல் வளர்த்துக் கொண்டுள்ள தவறிய கணிப்புகள் ஆகியவற்றை வெளிக்கொணருங்கள். அவை எவ்வாறு உருவானது என்பதற்கு காரணத்தைத் தேடுங்கள்.
Written by Thurai
No comments:
Post a Comment