tamilveli

More than a Blog Aggregator

Wednesday, July 14, 2010

சர்க்கரை வியாதியால் இனிப்பை தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் இனிப்பான செய்திதான்.

சர்க்கரை வியாதியால் இனிப்பை தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் இனிப்பான செய்திதான். பராகுவேயில் பிரபலமான ஒரு செடி இப்போது உலகெங்கும் உள்ள சர்க்கரை வியாதியஸ்தர்களை பெரிதும் கவரத் தொடங்கியுள்ளது.
அதன் பெயர் ஸ்டீவியா. அதன் தாவரவியல் பெயர் ஸ்டீவியா ரிபாடியானா (Stevia rebaudiana), சுருக்கமாக ஸ்டீவியா.

இந்த செடி மகா இனிப்பானது. இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் சாறு அத்தனை இனிப்பு நிறைந்தது. இதை செயற்கை சர்க்கரை போல பயன்படுத்தி வருகின்றனர்- தென் அமெரிக்காவில். இத்தனை இனிப்பாக இருந்தாலும், சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானது என்பதுதான் இதன் விசேஷமே.
இந்த செடியின் பூர்வீகம் தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே ஆகும். பல நூற்றாண்டுகளாக இந்த மூலிகைச் செடியை பராகுவேயில் உள்ள குவாரனி என்ற இனத்தவர் ஸ்வீடனராக பயன்படுத்தி வருகின்றனர். மிகச் சிறிய அளவிலான இந்த செடியின் இலைகளில்தான் இந்த இனிப்புத் தன்மை காணப்படுகிறது. சாதாரண சர்க்கரையை விட இதன் இனிப்பு 300 மடங்கு அதிகமாகும்.
மேலும் சர்க்கரையி்ல் உள்ளது போல அல்லாமல், இந்த ஸ்டீவியாவில் கலோரி ஒரு துளி கூட கிடையாது. மேலும் ரத்தத்தில் நமது சர்க்கரையின் அளவையும் இது அதிகரிக்காது.
இந்த செடிக்கு பராகுவேயில் கா ஹே ஹே (kaa he-he) என்று பெயர். கா ஹேஹே என்றால் இயற்கை மூலிகை என்று பொருளாகும். ஸ்பெயின் நாட்டவர் பராகுவேக்கு வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பிருந்தே இந்த ஸ்டீவியாவை பராகுவே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
நம் ஊரில் கடுங்காபி என்று சொல்வோமே அதேபோன்ற தேனீர் தயாரிப்பி்ல இந்த குவாரனி இனத்தவர் விசேஷமானவர்கள். அதற்கு இனிப்பு சேர்க்க சர்க்கரைக்குப் பதில் இந்த ஸ்டீவியா சாற்றைத்தான் கலக்கிறார்கள்.
இத்தாலியைச் சேர்ந்த தாவரவியல் நிபுணரான டாக்டர் மோய்சஸ் சான்டியாகோ பெர்டோனி என்பவர் 1800களின் இறுதியில்தான் இந்த ஸ்டீவியாவின் அருமையைக் கண்டுபிடித்தார். பராகுவேயில் உள்ள விவசாய கல்லூரியின் இயக்குநராக இருந்தவர் பெர்டோனி.
அவரது கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பராகுவேக்குள்ளேயே முடங்கிக் கிடந்த ஸ்டீவியா தென் அமெரிக்கா முழுவதும் பரவியது. மேலும், தென் அமெரிக்கக் கண்டத்தைத் தாண்டி அமெரிக்காவுக்கும் பரவியது.
1918ம் ஆண்டு முதல் முறையாக அமெரிக்காவுக்கு ஸ்டீவியா செடி பயணித்தது. அங்கு அதை தோட்ட முறையில் பயிரிட்டு வளர்த்தனர். இருப்பினும் கூட வட அமெரிக்காவில் இது பிரபலமாகமலேயே இருந்து வந்தது.
1931ம் ஆண்டு இரண்டு பிரெஞ்சு வேதியியல் நிபுணர்கள், ஸ்டீவியா செடியின் இனிப்புத் தன்மைக்கு ஸ்டீவியோசைட் என்ற கூட்டுப் பொருள்தான் காரணம் என்பதை கண்டுபிடித்து அறிவித்தனர். இருப்பினும் ஜப்பானில்தான் இதை வர்த்தக ரீதியாக பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்தனர்.
ஸ்டீவியோசைடை எந்த அளவுக்கு இனிப்பு போல பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்த ஜப்பானிய விஞ்ஞானிகள், சாதாரணமாக பயன்படுத்தப்படும் சர்க்கரைக்குப் பதில் ஸ்டீவியோசைடின் பிரித்தெடுத்த வடிவத்தை பயன்படுத்த முடியும் என்பதையும் வெளியுலகுக்கு அறிவித்தனர்.
1988ம்ஆண்டு வாக்கில், ஜப்பானின் மாற்று சர்க்கரைச் சந்தையில் ஸ்டீவியோசைடின் பங்கு 41 சதவீதமாக எகிறியது. மேலும், ஐஸ் க்ரீம், பிரெட், பிஸ்கட், ஊறுகாய், கடல் உணவு, காய்கறிகள், குளிர்பானங்கள் என சகலத்திலும் ஸ்டீவியோசைடை பயன்படுத்த ஆரம்பித்தனர் ஜப்பானியர்கள்.
இன்று ஸ்டீவியா செடியின் மகாத்மியம் பல நாடுகளிலும் பவி சீனா, ஜெர்மனி, மலேசியா, இஸ்ரேல், தென் கொரியா என பரவி விட்டது.
அமெரிக்காவில் சமீப காலம் வரை ஸ்டீவியாவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவங்களின் இரு புதிய தயாரிப்புகளுக்கு இந்த ஸ்டீவியாவை பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
கோக்கின் ட்ரூவியா மற்றும் பெப்சியின் பியூர்வியா ஆகியவற்றில் ஸ்டீவியாவின் சாறான ரெபியானாதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உலக நாடுகளை மயக்கிக் கொண்டிருக்கும் இந்த ஸ்டீவியா தற்போது இந்தியாவுக்கும் வரவுள்ளது. இதுகுறித்து ஸ்டீவியா பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சவுரப் அகர்வால் கூறுகையில்,
நறுமணம் மிக்க ஸ்டீவியா மூலிகைச் செடி செம்மண்ணிலும் பிற வளம் நிறைந்த மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது. 50 முதல் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் வளரக்கூடிய இந்த செடியை பயிரிட்டு வளர்ப்பதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. இந்திய தட்பவெட்ப நிலையில் இந்த செடி நன்றாக வளரும். எனவே இதை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயிரிடலாம். வீட்டு தோட்டத்திலும் வளர்க்கலாம்.
ஸ்டீவியா செடியின் இலை, விதை, தண்டு ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மாற்று இனிப்பு பொருள் ஆகும். ஸ்டீவியா பவுடரை தொடர்ந்து பயன்படுத்தினால் அது இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்க உதவும் என்பதும் கண்டு அறியப்பட்டு உள்ளது.
ஸ்டீவியா செடி இந்தியாவில் பயிரிடப்பட உள்ளது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த செடியை இந்தியாவில் பயிர் செய்ய பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு மத்திய விவசாய அமைச்சகத்துடன் தொடர்புடைய பல்வேறு துறைகளை எங்கள் நிறுவனம் அணுகி இருக்கிறது என்றார்.

No comments: