Sunday, July 18, 2010
சாகும்வரை உண்ணா நோன்பு" போராட்டங்கள் மூன்று வகை:- தியாகி திலீபன்; "கலைஞர்"; வீரவன்ச!
ஈழத் தமிழர்கள் தொடர்பில், கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் மேறளப்பட்டபடும் "சாகும்வரை உண்ணா நோன்பு" போராட்டங்கள் மூன்று ஆகும். இதில் முதலாவதாகவும் இதயத் தூய்மையுடனும் ஆரம்பிக்கப்பட்டு அதின் மூலம் உயிர் நீத்த பெருமை திலீபனையே சாரும்.
இவரது போராட்டத்தின் பின்னணியில், ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய இந்திய அரசும்- இலங்கையும் தமிழர் உரிமைகள் குறித்துச் செய்துகொண்ட "சமாதான ஒப்பந்தத்தை" உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும் என்னும் கோரிக்கை இருந்தது.
இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனமான தமிழர்களது, உரிமைகள்; ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவிலாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தித் தனது போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், அஹிம்சையால் சுதந்திரம் பெற்றதாகப் பெருமை பேசும் இந்திய அரசினாலேயே "கண்டுகொள்ளப் படாமல்" உயிர் இழக்க நேர்ந்தது.
தனை அடுத்து இரண்டாவதாக எமது மனக் கண்களில் நிழலாடுவது, தமிழகத்தின் முதல்வர் "கலைஞர்" நிகழ்த்திய ஐந்து மணிநேர "மெரீனாக்" கடற்கரைப் போராட்டம்.
காற்றோட்டம் நிறைந்த கடற்கரையிலேயே, குளிரூட்டிகள் சகிதம் "உலகப் புகழ்"மிக்க போராட்டத்தை நடாத்தியதன் மூலம் அவர் "முள்ளிவாய்க்கால் படு கொலைகளை" தடுத்து நிறுத்த முடிந்ததா ? என்பது இன்றுவரை "மில்லியன் டாலர்" கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.
இப்போது மூன்றாவதாக இடம் பெற்றிருப்பது, இலங்கை அமைச்சர் ஒருவரின் "போராட்டம்".
சென்ற வருடம், நிகழ்ந்துவிட்ட மனிதப் படுகொலைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அதன் உண்மை நிலையினை உலகிற்குத் தெரிவிப்பதற்கென, ஐ.நா வின் தலைமைத்துவத்தால் அனுப்பிவைக்கப் படுவதுதான் இந்த மூவர் குழு.
இதனைக் கலைக்க வேண்டும், இல்லையேல் " சாகும்வரை எனது போராட்டம் தொடரும், நான் இறந்து விட்டால் சிங்களத்தின் மைந்தர்கள் இதனைத் தொடர்வார்கள்" என்று சூளுரைத்துவிட்டுக் களத்தில் குதித்திருக்கிறார் விமல் வீரவன்ச.
இந்த மூவரின் "போராட்டங்க"ளும் ஈழத் தமிழர்கள் தொடர்பானவை என்பதைத் தவிர, அவர்களது குறிக்கோள்கள் வேறுவேறானவையே!
திலீபன் ஓர் "ஆயுதப் போராளி"யாக இருந்தும்; அண்டை நாடொன்று தமிழருக்குச் சில உரிமைகளையாதல் பெற்றுத்தரும் பொருட்டுச் செய்து கொண்ட ஒப்பந்தததைக் காலம் தாழ்த்தாது நிறைவேற்றுங்கள் என்னும் வேண்டுகோளினை முன்வைத்து அதன் மூலம் உயிர் நீத்தார்.
ஓர் இனத்தின் அவல நிலைக்குப் பரிகாரம் வேண்டிப் போராடியவர் அவர். அதன் பின்னணியில் "பதவி ஆசையோ". "நடிப்போ" இருக்கவில்லை. ஆகையினால்தான் தனது "போராட்டத்தில்" உறுதியோடிருந்து, அதனை உதாசீனம் செய்த "அரசுகளின் நடவடிக்கைகளால்" தனதுயிரையும் இழக்க நேர்ந்தது.
அவர் "புலி"யாகவோ அல்லது "சிங்க"மாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்.ஆனால் அவரது கோரிக்கையில் நியாயம் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.
"கலைஞ"ரின் "உண்ணா விரதப் போராட்டம்" எத்தகையது என்பதை இங்கு விபரமாக எழுதவேண்டியதில்லை. அண்மையில், இலங்கை அரசினால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் மீது திடீர்ப் "பாசம்" கொண்டு மீண்டும் "கடிதம்" எழுத ஆரம்பித்ததில் மறைந்திருக்கும் "2011" தமிழகத் தேர்தல் குறித்த அவரது "காய் நகர்த்தல்களை" புரிந்துகொண்டவர்களுக்கு, அன்றைய அவரது "மெரீனா ஒத்திகை"பற்றிய பின்னணியையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
"வீர வன்ச" வின் போராடம் சற்று விசித்திரமானது !
இலங்கை உட்பட உலக நாடுகள் பலவும் உறுப்பினர்களாக இருக்கும், ஐ.நாவுக்கு, அண்மைக்காலங்களில் கிடைத்த, "2009 ம் ஆண்டின் தமிழினப் படு கொலைகள்" பற்றிய உண்மைகளை அறியும் நிர்ப்பந்தம் அல்லது கடமை உருவாகியிருந்தது.
அதனை நிறைவேற்றுவதற்காக ஐ.நாவின் தலைமை மூவரை இலங்கைக்கு அனுப்பத் திட்டமிட்டது.
ஏற்கனவே எமது நாட்டில் அதனை விசாரிக்க ஆணைக்குழு அமைத்துவிட்டோம், இனி எதற்கு ஐ.நாவில் விசாரணை என்று "குதிக்கிறது" இலங்கை.
அதன் நிலையை ஆதரித்துப் "போராட்டத்தில்" இறங்கியிருக்கிறார் வீரவன்ச.
ஐ,நா வின் போக்கினை ரஷ்யா போன்றவை வெளிப்படையாகவே கண்டிக்கின்றன. ஒரு காலத்தில் "இரும்புத்திரை நாடு" என்று பெயர் பெற்றிருந்த ரஷ்யா , செச்சென்யாவால் "தலை வலி"யை அனுபவிக்கும் ரஷ்யா ஐ.நாவைக் கண்டிக்காது விட்டிருந்தால்தான் ஆச்சரியம்!
"முக்காடு" போட்டுக் கொண்டிருக்கும் இந்தியா இன்னும் வாய் திறக்கவில்லை.
வீரவன்ச எதற்காகப் பயப்படுகிறார் என்பதை அவரது பேச்சே எதிரொலிக்கிறது!
இலங்கையின் தேசீயப் பத்திரிகைகளுள் ஒன்றான "வீர கேசரி"யின் சென்ற வெள்ளிக்கிழமை [09-07-2010] முகப்புச் செய்தியில் வீரவன்சவின் "வீர வசனங்கள்" பதிவாகியிருக்கின்றன.
�வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளைக் கொன்றதாகக் கூறி இலங்கை இராணுவத்தையும் அரச தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தூக்கிலிட பான் கீ மூனின் நிபுணர் குழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் சிலரது ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐ.நா வின் நிபுணர் குழுவை குறைவாக கணிப்பிடக் கூடாது. ஏனெனில், இந் நிபுணர் குழு எதிர்வரும் நாட்களில் விசாரணைக் குழுவாக மாறலாம். பின்பு பல விசாரணைகளை நடத்தி பொய் குற்றச் சாட்டுகளை நிரூபித்து எமது நாட்டுத் தலைமைத்துவங்களை சர்வதேசம் தூக்கிலிட்டுவிடும்." இவ்வாறு பேசியிருக்கிறார் விமல் வீரவன்ச.
இத்தனைக்கும், ஐ.நா; இலங்கையில் தமிழினப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், நம்பியாரையும், மேனனையும் நம்பிக் "கைகட்டி நின்ற" ஓர் நிறுவனந்தான்!
இதற்குப் போய் வீரவன்ச இவ்வளவு தூரம் பயப்படுவதுதான் வியப்பாக உள்ளது.
ஒரு வேளை இதுவும் சர்வதேசம் ஆடும் மற்றொரு நாடகமோ ? யார் கண்டது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment